Tuesday, 24 July 2012

இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள்

ஈமுக்கோழிகள் 18-24 மாத வயதில் முதிர்ச்சி அடையும். 
ஒரு ஆண் ஈமுக்கோழிக்கு ஒரு பெண் ஈமுக்கோழி என்ற விகிதத்தில் பராமரிக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஜோடி ஈமுக் கோழிகளுக்கு 2500 சதுர அடி இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இனப்பெருக்கம் செய்ய  தனிமைக்காக  மரங்கள் மற்றும் புதர்கள் இருக்கும் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் ஈமுக்கோழிகளுக்கென தயாரிக்கும் தீவனத்தினை இனப்பெருக்க காலத்திற்கு 3-4 வாரத்திற்கு முன்பே அளிக்கத் தொடங்க வேண்டும். தீவனத்தில் போதுமான அளவு தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் கலந்து அளிப்பதன் மூலம் முட்டைகளின் கருவுறுதல் மற்றும் குஞ்சுபொரிக்கும் திறனை அதிகரிக்கலாம்.இனப்பெருக்க காலத்திற்கு பின்பு ஆண்பெண் பறவைகளை தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும். சாதாரணமாகஒரு வளர்ந்த ஈமுக்கோழி ஒன்றுஒரு நாளைக்கு ஒரு கிலோ தீவனம் உண்ணும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் தீவனம் எடுக்கும் அளவு திடீரென குறையத்தொடங்கும். எனவே இத்தருணத்தில் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஈமுக்கள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.பெண் ஈமுக்கோழிகள் அவற்றின் 2.5 வயதில் முதல் முட்டையிடத் தொடங்கும். முட்டையிடுதல் வருடத்தின் குளிரான மாதங்களில் (அக்டோபர் முதல் பிப்ரவரி) வரை நடைபெறும். முட்டையிடுதல் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும். முட்டைகள் உடைவதை தடுக்க தினமும் இரண்டு முறை முட்டைகளை சேகரிக்க வேண்டும். பருவமடைந்த முதல் வருடத்தில் ஒரு பெண் ஈமுக்கோழி 15 முட்டைகள் இடும். பின்வரும் வருடங்களில் இடும் முட்டைகளின் அளவு 30-40 வரை அதிகரிக்கும்.. ஒரு ஈமு கோழியின் முட்டையின் எடை 475-650 கிராம் ஆகும். ஈமுகோழிகளின் முட்டை பச்சை நிற மார்பிள் கல்லின் நிறத்தில் இருக்கும். முட்டை ஓட்டின் மேற்புறம் வழுவழுப்பாகவோ அல்லது சொரசொரப்பாகவோ இருக்கும். பெரும்பாலான (42%) முட்டைகள் நடுத்தர பச்சை நிறத்தில் மேற்பகுதி சொரசொரப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment